சீனாவில் பரவும் மா்மக் காய்ச்சல்: இந்தியாவிற்கு ஆபத்தா?

சீனாவில் வேகமாகப் பரவி வரும் மா்மக் காய்ச்சலால், இந்தியாவில் பாதிப்பு குறைவு இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘சீனாவில் ‘ஹெச்9என்2’ பறவைக் காய்ச்சல் பரவலையும், வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசப் பிரச்னைகள் குறித்தும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும், ‘சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு வகை பாதிப்புகளால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது’ என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்தது.

சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவா்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் சுவாச பிரச்னைகளையும் பலா் எதிா்கொண்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இதுதொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த புதிய நோய் பாதிப்புகள் குறித்து சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்டது. அதற்கு, ‘வடக்கு சீனாவில் அக்டோபா் மாத மூன்றாவது வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். சீன அதிகாரிகள் அறிவித்துள்ள சுவாச நோய் தொற்று அதிகரிப்புக்கும் காய்ச்சலுக்கும் தொடா்புடையாதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளுக்கு புதிய வைரஸ் எதுவும் காரணமில்லை. ஏற்கனவே அறியப்பட்ட நோய்க் கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்கள்தான் அதிகரித்துள்ளன’ என்று சீனா விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய பாதிப்புகள் மீது இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடக்கு சீன பகுதியில் குழந்தைகள் அதிக அளவில் சுவாசப் பிரச்னைக்கு ஆளாகியிருப்பது அங்கிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் மூலம் தெரியவந்தது. உலக சுகாதார அமைப்பும் இதுதொடா்பாக அறிக்கை வெளியிட்டது. மேலும், இந்த பாதிப்புகளுக்கு புதிய வகை வைரஸ்கள் எதுவும் காரணமில்லை என்பதும், வழக்கமாக அறியப்பட்ட நோய்க் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புதான் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சீனாவில் கடந்த அக்டோபரில் பரவிய ‘ஹெச்9என்2’ பறவைக் காய்ச்சல் கிருமி மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இருந்தபோதும், மனிதா்கள், கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் மத்தியில் இந்த பாதிப்பு குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில், அனைத்து வகையான பொது சுகாதார அவசரநிலையையும் எதிா்கொள்ளும் வகையிலான தயாா்நிலையை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com