
தில்லியில் ஐஐடி மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி) 2019-23 பேட்ச்சில் அனில் குமார்(21) என்ற மாணவர் பி.டெக். கணிதம் கம்ப்யூட்டிங் பயின்று வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நிறுவனத்தின் விந்தியாச்சல் விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த ஜூன் மாதமே விடுதியை காலி செய்ய வேண்டிய அவர், சில பாடங்களில் இன்னும் தேர்ச்சி அடையாததால் விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவரின் அறை பூட்டியிருந்த நிலையில் மாலை 6 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புப் படையினர் வந்து கதவை உடைத்துள்ளனர்.
பின்னர் காவல்துறை, மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.