

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு நாளை(செப். 19) சந்திக்கவுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று(செப். 18) சந்திக்கவிருந்த நிலையில் இந்த சந்திப்பு நாளை(செப். 19) நடைபெற உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக பேசவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு தில்லி சென்றுள்ளது.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்கற்றுக் குழு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதைத் தான் நாளை நான் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப் போகிறேன்.
கர்நாடகத்திடம் தண்ணீர் இருக்கிறது என்று நான் சொல்கிறேன். அவர்களிடம் தண்ணீர் இருக்கிறது என்று மூன்றாவது தரப்பான ஆணையமும் சொல்கிறது.
கர்நாடக அரசு இன்று நேற்றல்ல, இதுவரை எதற்குமே ஒப்புக்கொண்டது இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுதான் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நாங்கள் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நம்புகிறோம்' என்று பேசினார்.
முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி. ஷர்மா ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்துப் பேசினர். இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சரிடம், ஆணையத் தலைவர் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.