காங். எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது: உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை

வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு எதிரான வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க கோரிக்கை
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சில வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அக்கட்சியின் சில வங்கி கணக்குகளில் இருந்து அபராதத் தொகையாக ரூ.135 கோடி வசூலிக்கப்பட்டது.

இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி காங்கிரஸுக்கு வருமான வரித் துறை கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2014-15-ஆம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.663 கோடி, 2015-16-ஆம் ஆண்டுக்கு சுமாா் ரூ.664 கோடி, 2016-17-ஆம் ஆண்டு ரூ.417 கோடி என மொத்தம் ரூ.1,745 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை மீண்டும் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம்
ஏப்.15 வரை நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் கேஜரிவால்!

இந்த நிலையில், காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மக்களவைத் தேர்தலின் போது எந்த கட்சிக்கும் வருமான வரித்துறை இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது.” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பிறகு ஜூன் 2வது வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கையும் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தற்போது எடுக்க வேண்டாம் என்று வருமான வரித்துறைக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com