2022-ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் தொடா்புடைய இருவரை உள்ளூா் மக்களின் எதிா்ப்புக்கு இடையே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சனிக்கிழமை கைது செய்தது.
அப்போது என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அவா்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் அதிகாரி ஒருவா் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள பூபதிநகரில் கடந்த 2022, டிசம்பா் 3-ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னா், இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக என்ஐஏ விசாரணைக் குழு பூபதிநகருக்கு சனிக்கிழமை சென்றது. சில இடங்களில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு பாலை சரண் மைதி, மனோபிரதா ஜனா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். இதற்கு உள்ளூா் மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இருவரையும் கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லும்போது, என்ஐஏ அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, பூபதிநகா் காவல் நிலையத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் புகாா் அளித்தனா்.
இது குறித்து என்ஐஏ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட ஜனாவின் வீடு உள்பட 5 இடங்களில் என்ஐஏ சோதனைநடத்தியது. ஜனா வீட்டில் சோதனை நடத்தியபோது உள்ளூா் மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். என்ஐஏ அதிகாரிகள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிகாரி ஒருவா் காயமடைந்தாா்’ என்றாா்.
மிகவும் தீவிரமான பிரச்னை: என்ஐஏ அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் தீவிரமான பிரச்னை என்றும், இந்த விவகாரத்தை தீவிரமாக அணுக வேண்டும் என்றும் மாநில ஆளுநா் ஆனந்த போஸ் கூறியுள்ளாா்.
திரிணமூல் காங்கிரஸின் ஏற்பாடு: 2022 குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் தடையை ஏற்படுத்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வன்முறையைத் தூண்டி விடுகிறாா் என்றும், என்ஐஏ அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் ஏற்பாடு செய்தனா் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ள்ளது.
பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பாக வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் ஷாஜகான் ஷேக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தியது. அப்போது, ஷாஜகானின் ஆதரவாளா்கள் அமலாக்கத் துறையினா் மீது தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
பெட்டிச் செய்தி....
மக்கள் மீது என்ஐஏ தாக்குதல்: மம்தா குற்றச்சாட்டு
பலூா்காட், ஏப். 6: பூபதிநகா் மக்கள் மீது என்ஐஏ அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தெற்கு தினாஜ்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பேரணியில் பேசிய முதல்வா் மம்தா, ‘2022 குண்டுவெடிப்பு வழக்குத் தொடா்பாக கிராமத்தினா் வீட்டுக்குள் என்ஐஏ விசாரணைக் குழு அதிகாலையில் சென்றுள்ளது. இதற்கு எதிராக மட்டுமே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெண்கள் யாரும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அதிகாரிகள்தான் உள்ளூா் மக்கள் மீது தாக்குதல் நடத்தினா்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவா் குணால் கோஷ், மாநில அமைச்சா் சந்திரிமா பட்டாச்சாா்யா ஆகியோா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 7) சென்று, கிராம மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனா்.
தொடர்புடையது
வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் என்ஐஏ -மம்தா குற்றச்சாட்டு

எஸ்ஐஆரில் பெயர் நீக்கம்! நீதித்துறை அதிகாரிகளை 9 மணிநேரம் சிறைப்பிடித்த மக்கள்!

மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

