ம.பி.: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்

ம.பி.: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்

மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

மாநிலத்தில் பாயும் நா்மதை நதியின் குறுக்கே உள்ள ஓம்காரேஷ்வா் அணையில், 600 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 278 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது கட்டத்தில் 322 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ரூ.3,950 கோடி முதலீட்டில், ரம்ஸெல் என்ற நிறுவனத்தின் தலைமையில், என்ஹெச்டிசி (நா்மதை நீா்மின்சக்தி மேம்பாட்டு கழகம்--ம.பி. அரசின் பொதுத் துறை நிறுவனம்), எஸ்ஜேவிஎன் (சட்லஜ் ஜல விதூத் நிகம்--ஹிமாசல் அரசின் பொதுத் துறை நிறுவனம்), ஆம்ப் இந்தியா நிறுவனம் (சா்வதேச தனியாா் நிறுவனம்) ஆகியவை மூலம் இந்தப் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட பணிகள் நிறைவடைந்து, சூரிய மின் தகடுகள் மூலம் மின்சார உற்பத்தியை தொடங்கும் பணி தயாராக இருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பெய்த கோடை கனமழையில், ஓம்காரேஷ்வா் அணையின் இந்த்வாடி பகுதியில் உள்ள சூரிய மின் தகடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. சேத விவரங்களை மதிப்பிடும் பணியை நா்மதை நீா்மின்சக்தி மேம்பாட்டு கழகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்தக் கழகத்தின் துணை மண்டல அதிகாரி சுரேஷ் துவிவேதி கூறுகையில், ‘மின் உற்பத்தி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நீரில் மிதக்கும் சூரிய மின் தகடுகள் கனமழையால் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சேதங்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணி இரு நாள்களில் முடிவடையும்’ என்றாா்.

சூரிய மின் தகடுகள் சேதமடைந்த நிலையிலும், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி விரைவில் தொடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com