சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் காங்கேர் மாவட்டம், பினாகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்தத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அங்குள்ள ஹபடோலா காட்டுப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது அங்கு மறைந்திருந்த நக்ஸல் தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் தாக்குப் பிடிக்க முடியாத நக்ஸல்கள் படிப்படியாக பின்வாங்கி தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த 29 நக்ஸல்களின் உடல்களை மீட்டனர். இந்த மோதலில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 7 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 3 இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், வெடிபொருள் என ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய நக்ஸல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொல்லப்பட்ட நக்ஸல்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களும் இருக்கலாம் என்று தெரிகிறது.

குண்டுகள் பாய்ந்து காயமடைந்த மூன்று வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில்...: சத்தீஸ்கரின் பஸ்தர் பிராந்தியம் நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள இடமாகும். பஸ்தர் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சம்பவம் நிகழ்ந்த காங்கேர் பகுதியில் இரண்டாம் கட்டமான ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வழக்கமாக நக்ஸல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அவர்களுக்கு பயந்து மக்கள் வாக்களிப்பது குறைவாகவே இருக்கும். இந்த முறையும் தேர்தலுக்கு நக்ஸல்களால் அச்சுறுத்தல் இருந்தது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் 29 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேர் உள்பட பஸ்தர் பகுதி 7 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆண்டில் பஸ்தர் பகுதியில் மட்டும் இதுவரை 79 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு பிஜாபூர் மாவட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி 13 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நக்ஸல்கள் தேர்தலைச் சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் பிராந்தியத்தில் வாக்குப் பதிவு மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

நக்ஸல் தீவிரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதில் உறுதி

புது தில்லி: நக்ஸல்கள் 29 பேரை சுட்டுக் கொன்று அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: சத்தீஸ்கரில் ஏராளமான நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீரத்துடன் செயல்பட்டு நக்ஸல்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த பாதுகாப்புப் படையினருக்கு எனது பாராட்டுகள். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.

நாட்டின் வளர்ச்சி, அமைதி, இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு நக்ஸல் தீவிரவாதம் மிகப் பெரிய எதிரி. இந்த தீவிரவாத துன்புறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com