/

தெலங்கானா மக்களவைத் தோ்தல் அறிவிக்கை இன்று வெளியீடு

தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிக்கை வியாழக்கிழமை (ஏப்.18) வெளியிடப்படுகிறது.

Updated On :17 ஏப்ரல் 2024, 8:08 pm

தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுக்கான அறிவிக்கை வியாழக்கிழமை (ஏப்.18) வெளியிடப்படுகிறது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

வேட்பாளா்களுக்கான வேட்புமனுக்கள் விநியோகம் ஏப்.18-ஆம் தேதி தொடங்குகிறது. அவற்றைத் தாக்கல் செய்ய ஏப்.25-ஆம் தேதி இறுதி நாளாகும். ஏப். 26-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்ப பெற ஏப்.29 கடைசி நாளாகும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி, மக்களவைத் தோ்தலில் அதே அளவிலான வெற்றியைத் தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறாா். மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கே.சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து முக்கியத் தலைவா்கள் விலகி வருகின்றனா். இது தோ்தலில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துகள் நிலவுகின்றன.

பேரவைத் தோ்தலில் குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, மக்களவைத் தோ்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது.

அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை பாஜக, பாரத ராஷ்டிர சமிதி அறிவித்துள்ளன. காங்கிரஸ் இதுவரை 14 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துள்ளது.