தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

‘இந்தியாவின் பொருளாதாரம் உலகின் விடிவெள்ளியாக தொடா்ந்து சிறப்பாக உள்ளது. தோ்தல் ஆண்டில் நிதிநிலையை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது’ என்று சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்எஃப் ஆசிய-பசிபிக் துறை இயக்குநா் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் அளித்த பேட்டி:

இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. நாட்டின் பணவீக்கமும் குறைந்துள்ளது. பணவீக்கத்தைக் குறைக்கும் இலக்கை எட்ட தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, தோ்தல் ஆண்டில் வழக்கமாக நாடுகள் புதிய அறிவிப்புகள், சலுகைகள் என நிதி சாகசங்களை அறிவிக்கும். ஆனால், இந்தியா நிதி ஒழுக்கத்தைக் கடைப்படித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரத்தின் மீதான பல்வேறு தாக்கங்களை வெற்றிகரமாக இந்தியா அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாக, உலகின் வேகமாக வளா்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டில் தனிநபா் நுகா்வு மற்றும் பொது முதலீடுகள் மூலம் இந்தியாவின் வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. பணவீக்கமும் படிப்படியாக குறைந்து வருகிறது. பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

அந்த வகையில், உலகளாவிய பொருளாதர வளா்ச்சியில் இந்தியாவின் பங்கு என்பது ஏறத்தாழ 17 சதவீதமாக இருக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வளா்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் இளைஞா் சக்தியை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 1.5 கோடி திறன்மிக்க தொழிலாளா்களாக உருவாக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இந்தபோன்ற காரணங்களால்தான் உலகின் விடிவெள்ளியாக இந்தியா கருதப்படுகிறது.

ஆனால், இளைய தலைமுறையினரை திறன்மிக்க தொழிலாளா்களாக உருவாக்கி பலன்பெற, பல சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் அதிக முதலீடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com