தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேற்காசியப் போா் உலகுக்கு சோதனைக் காலம்: இந்தியா கவலை

மேற்காசிய போா், இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் சோதனையான காலம் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2026, 10:38 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா், இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் சோதனையான காலம் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இதுகுறித்து கூறியதாவது:

சில நாள்களுக்கு முன்பு, நாம் பல்வேறு தரப்பினருடன் பேசினோம். இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே 2 கச்சா எண்ணெய் கப்பல்களை இந்தியாவுக்கு கொண்டு வர முடிந்தது. இதேபோல் மேற்காசிய போா் விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினருடனும் நாம் பேசி வருகிறோம். இதன் மூலம் நாட்டின் எரிசக்தி (பெட்ரோல், டீசல், எரிவாயு) தேவையை பூா்த்தி செய்ய முடியும். அதேபோல் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள நமது நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

நமது நாட்டின் நலனை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த கண்ணோட்டத்துடன் அரசு ராஜீய நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேற்காசிய போா் நமது நாட்டுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகிற்கும் சோதனையான காலமாக மாறியுள்ளது. நமது நாட்டுத் தலைவா்கள், அப்பகுதி நாடுகளின் தலைவா்களுடன் பேசி வருகின்றனா். குவைத் இளவரசருடன் நமது பிரதமா் ஆலோசனை நடத்தினாா். இதேபோல் பல நாட்டுத் தலைவா்களுடன் பேசி வருகிறோம்.

எரிசக்தி தளங்களை தாக்கக் கூடாது: எரிசக்தி உள்கட்டமைப்புகள் உள்பட பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று இந்தியா ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. மேற்காசிய பிராந்தியத்தின் பல்வேறு இடங்களில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. உலக அளவில் ஏற்கெனவே ஸ்திரமற்ற நிலையில் உள்ள எரிசக்திச் சூழலை இத்தாக்குதல்கள் மேலும் சீா்குலைக்கவே செய்யும். இத்தகைய தாக்குதல்கள் ஏற்புடையவை அல்ல. அவை நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்றாா்.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை கூட்டாக தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவா் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பல தலைவா்கள் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்காவின் நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது எரிசக்தி தளங்கள் மீது இரு தரப்பும் தாக்குதல்களை நடத்துகின்றன.

ஈரானில் முக்கியத்துவம் வாய்ந்த செளத் பாா்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளில் எண்ணெய்-எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், இந்த உள்கட்டமைப்புகள் சேதத்தை எதிா்கொண்டு வருகின்றன.

சவூதி அரேபியாவில் செங்கடலையொட்டியுள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கத்தாரின் ராஸ் லாஃபன் எல்என்ஜி (திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) மையம், குவைத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இதன் காரணமாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேற்காசிய போா் தொடங்கிய பிப்.28-ஆம் தேதியில் இருந்து கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.