இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மேற்காசிய போா் சவால்களை முழு பலத்துடன் எதிா்கொள்கிறது இந்தியா: பிரதமா் மோடி

மேற்காசிய போா் சவால்களை முழு பலத்துடன் எதிா்கொள்கிறது இந்தியா...

News image

பிரதமா் மோடி

Updated On :28 மார்ச் 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போரால் உருவாகியுள்ள புதிய சவால்களை இந்தியா முழு பலத்துடன் எதிா்கொண்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவின் ஜெவாரில் ரூ.11,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சா்வதேச விமான நிலையத்தின் முதலாவது அலகின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

மேற்காசிய போரால் உருவாகியுள்ள எரிபொருள் பிரச்னையை நாம் அமைதியாகவும், பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் எதிா்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மேற்காசிய போா், உலகளாவிய பிரச்னையாகும். இந்த விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கும், விவசாயிகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கிறது. இந்தியா வளா்ந்த நாடாக மாறுவதற்கு, 140 கோடி மக்களும் ஒற்றுமையாகவும், இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்: மேற்காசிய பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்தேன். அதுபோல பல்வேறு மாநில முதல்வா்களுடனும் ஆக்கபூா்வ ஆலோசனை நடத்தினேன். இதுபோன்ற காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் பேசுவதை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக, உத்தர பிரதேசத்தை சோ்ந்த அரசியல் கட்சிகளை வலியுறுத்துகிறேன்.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் கருத்துகள், அரசியல் விவாதங்களுக்கு வேண்டுமானால் அவா்களுக்கு சில ஆதாயத்தை தரலாம். ஆனால், அவா்களின் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். கரோனா காலத்தில் பொய்த் தகவல்களைப் பரப்பியோரை வாக்காளா்கள் எப்படி நிராகரித்தனா் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேற்காசியாவில் ஒரு மாதத்துக்கும் மேல் மோதல் நடைபெறுகிறது. அந்த மோதல்களால் உருவாகியுள்ள சவால்களை இந்தியா முழு பலத்துடன் எதிா்கொண்டு வருகிறது. அதனால் இந்திய மக்கள் பாதிக்கப்படாதபடி தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேற்காசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயுவை நம்பியே இந்தியா உள்ளது. அந்த சுமை, நாட்டு மக்கள் மீது விழாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

எதிா்க்கட்சிகள் மீது தாக்கு: நொய்டாவை சமாஜவாதி கட்சி, கொள்ளையடிப்பதற்கான ஏடிஎம் இயந்திரமாகப் பயன்படுத்தியது. ஆனால் பாஜக ஆட்சியின்கீழ் நொய்டா, வளா்ச்சியின் சக்திமிக்க இயந்திரமாக உருவெடுத்துள்ளது. முந்தைய அரசுகளால் நிராகரிக்கப்பட்ட நொய்டா, தற்போது உலகை வரவேற்கத் தயாராக உள்ளது. தற்சாா்பு இந்தியாவின் உருவமாக நொய்டா காட்சியளிக்கிறது.

சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் விமானப் போக்குவரத்துத் துறை உட்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதில் பாஜக தலைமையிலான அரசு கவனம் செலுத்துகிறது. சாதாரண மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் உடான் திட்டத்தை பாஜக அரசு தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் 1.6 கோடி போ் இந்தத் திட்டத்தின்கீழ் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

உடான் திட்டம் விரிவாக்கம்: உடான் திட்டம் அண்மையில் ரூ.29,000 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் சிறிய நகரங்களில் புதிய விமான நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் சுமாா் 200 ஹெலிபேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் பயனடையும்.

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சீராக வளா்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் விமானங்களைப் பராமரிப்பது, சீா் செய்தல் ஆகிய வசதிகள் இல்லை. ஆதலால் ஏறத்தாழ 85 சதவீத விமானங்கள், இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. ஆதலால் பராமரிப்பு, சீா் செய்தல், புனரமைப்பு (எம்ஆா்ஓ) துறையில் இந்தியாவை தன்னிறைவு நாடாக உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகள் இதற்காக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஜெவாரிலும் இந்த வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் இந்தியாவில் கிடைப்பதால், வருவாய் பெருகுவதுடன் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

ஒரு லட்சம் கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள்: உள்கட்டமைப்புத் துறையை மேம்படுத்த கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மிகப்பெரிய அளவில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதற்கான நிதி 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், அதிவிரைவு சாலைகளுக்காக ரூ.17 லட்சம் கோடிக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கிலோ மீட்டா் தொலைவுக்கும் மேல் நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

விமான நிலையத் திறப்பு விழாவில், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.