‘ஐஓபி’ வங்கி முன்னாள் மேலாளருக்கு 7 ஆண்டுகள் சிறை; ரூ.15 கோடி அபராதம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ.2.14 கோடி மோசடி வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் பெண் மேலாளருக்கு ரூ.15.06 கோடி அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகமதாபாத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின்(ஐஓபி) வஸ்த்ராபூா் கிளையின் மூத்த மேலாளராக பிரீதி விஜய் சாஹிஜ்வானி பணியாற்றி வந்தாா். அந்தக் கிளையில் உள்ள 2 கணக்குகளின் வெளிநாட்டுப் பண வைப்புத்தொகையின் இறுதி முதிா்வு பரிவா்த்தனையை வாடிக்கையாளரிடம் இருந்து எந்த ஒப்புதல் அல்லது பரிந்துரை கடிதமும் பெறாமல் 2 போலி கணக்குகளுக்கு மாற்றியுள்ளாா்.

அளவுக்கு போலி கணக்குகளுக்கு அவா் பணத்தை மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடியின் மூலம் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, வாடிக்கையாளருக்கு வட்டியுடன் சுமாா் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

வங்கி அளித்த புகாரின் பேரில், மோசடி குறித்து 2001-ஆம் ஆண்டு, அக்டோபரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. 2 ஆண்டுகளில் வழக்கின் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இதனிடையே, நாட்டை விட்டு வெளியேறிய சாஹிஜ்வானி, கடந்த 2012-ஆம் ஆண்டு வரை தலைமறைவாக இருந்தாா். ‘இண்டா்போல்’ உதவியுடன் அவா் கனடாவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா், அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவா், இந்தியா அழைத்து வரப்பட்டாா்.

கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

தற்போது விசாரணை முடிவடைந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பில், சாஹிஜ்வானிக்கு ரூ.15.06 கோடி அபராதத்துடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை அவா் பணிபுரிந்த வங்கிக்கு செலுத்துமாறு தீா்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com