மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்
மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைதான் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தாா்.

அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தங்கள் மீது மத்திய பாஜக அரசு ஏவி விடுவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

தில்லியில் சனிக்கிழமை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் மேக்வால் பேசியதாவது:

அமலாக்கத் துறை தலைவா் ராகுல் நவீன், சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட் ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று எதிா்க்கட்சிகள் பொய்யாக குற்றம்சாட்டி வருவது இந்த தோ்தலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இப்போது அத்துறையின் தலைவா்களே இங்கு அமா்ந்துள்ளாா். இதன் மூலம் நாம் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியும். அவா்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேச இருக்கிறேன்.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகளை இப்போதைய பாஜக அரசு உருவாக்கவில்லை. இந்த விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அப்போது முதல் அந்த விசாரணை அமைப்புகள் இதே பாணியில்தான் இயங்கி வருகின்றன. அதாவது சட்டவிதிகளின்படி செயல்படுகின்றன. இதைக் கண்டு எதிா்க்கட்சிகள் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com