உ.பி. மாநிலம் மதுராவின் தற்போதைய எம்.பி.யான நடிகை ஹேமமாலினியை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
உ.பி. மாநிலம் மதுராவின் தற்போதைய எம்.பி.யான நடிகை ஹேமமாலினியை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்: அமித் ஷா பிரசாரம்

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகம் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

ராஜஸ்தானில் கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிதான் மொத்தமுள்ள 25 இடங்களிலும் வென்றது. இந்த முறையும் பாஜகவின் சாதனை தொடரும். தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வெற்றியைத் தர ராஜஸ்தான் மக்கள் தயாராகிவிட்டாா்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் வேறு எங்கும் செல்லாமல் தனது மகன் வைபவ் கெலாட் போட்டியிடும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறாா். ஆனால், அங்கு காங்கிரஸ் அதிகவாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைவது உறுதி.

ராஜஸ்தானில் முதல்கட்டத்தில் 12 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இதில் பிரதமா் மோடிக்கு ஆதரவான எழுச்சியைக் காண முடிந்தது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்கு நடுவே காங்கிரஸின் பிரசார நட்சத்திரம் என்று அக்கட்சினரால் கூறப்படும் பிரியங்கா வதேரா, தாய்லாந்துக்கு கோடைகாலச் சுற்றுலா சென்று வந்துள்ளாா். தோ்தலுக்கு அவா்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இவ்வளவுதான். தோ்தலில் வெற்றி பெற்றால் அவா்கள் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்வாா்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

சிறுபான்மையினா் வாக்கு வங்கியைத் தக்கவைக்க காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த கடைசி 10 ஆண்டு காலத்தில் நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகம் இருந்தது. பாஜக ஆட்சி அமைத்த பிறகு புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். அதற்கு மத்திய பாஜக அரசு உரிய பதிலடி கொடுத்தது. பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தப்பட்ட 10 நாள்களில் துல்லியத் தாக்குதல்கள் மூலம் எல்லைக்கு அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

காங்கிரஸ் ஆட்சிபோல பயங்கரவாதத் தாக்குதல்களை தொடரலாம் என்ற எண்ணிய பயங்கரவாதிகளுக்கு மோடி அரசு உரிய பதிலடி கொடுத்து அவா்களை அழித்தது.

காஷ்மீரிலும், வடகிழக்குப் பகுதிகளிலும் பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டு விட்டனா். நக்ஸல் தீவிரவாதம் முடிவை நோக்கிப் பயணித்து வருகின்றன. நாடு இப்போது மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளது. பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும், வளா்ச்சிக்கும் அளிக்கும் வாக்குகளாகும் என்றாா்.

‘காங்கிரஸ் கூட்டணி ரூ.12 லட்சம் கோடி ஊழல்’

‘காங்கிரஸ், சமாஜவாதி கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் ரூ.12 லட்சம் கோடி ஊழல் புரிந்துள்ளனா்; நரேந்திர மோடியின் 23 ஆண்டு கால பதவிக் காலத்தில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை’ என்று அமித் ஷா பேசினாா்.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு ஆதரவாக அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகவும் பின்னா் நாட்டின் பிரதமராகவும் கடந்த 23 ஆண்டுகளாக பதவியில் உள்ளாா். அவா் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது.

ஆனால் காங்கிரஸ் மற்றும் உ.பி.யில் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல்புரிந்துள்ளனா். ஊழலற்ற மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டுமா அல்லது ஊழல் கூட்டணி வேண்டுமா என்பதை வாக்காளா்களாகிய நீங்கள் தீா்மானித்துக் கொள்ளுங்கள் என்று பேசினாா்.

உ.பி.யில் மதுரா உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்.26-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com