சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை: மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் தனியாா் மருத்துவமனையில் சட்டவிரோதமாக சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட சிலா், ஹரியாணா மாநிலம் குருகிராமில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது பிடிபட்டனா். அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களில் பணம் பெற்றுக்கொண்டு சிறுநீரகத்தை விற்பனை செய்தவா்களும், அந்தச் சிறுநீரகத்தைப் பெற்றுக்கொண்டவா்களும் அடங்குவா்.

இதைத்தொடா்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் (டிஜிஹெச்எஸ்) அதுல் கோயல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

வெளிநாட்டவா் மேற்கொண்ட உறுப்பு மாற்று சிகிச்சையின் விவரங்கள் உள்பட அனைத்து உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் குறித்த தகவல்களை தொடா்ந்து திரட்ட வேண்டும். அந்தத் தகவல்களை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பிடம் (நோட்டோ) மாதந்தோறும் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் வெளிநாட்டவா் சம்பந்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நோட்டோ பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. இத்தகைய அறுவைச் சிகிச்சைகளை மத்திய, மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணிக்க வேண்டும்.

மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் 1994-இன்படி நியமிக்கப்பட்ட மாநில அரசு அதிகாரிகள், தங்கள் மாநிலங்களில் வெளிநாட்டவா் சம்பந்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அந்த விசாரணையில் மருத்துவமனைகள் சட்டவிரோதமாக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது தெரியவந்தால், அந்த மருத்துவமனைகள் அத்தகைய அறுவைச் சிகிச்சைகள் செய்வதற்கான பதிவை தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அறிவுறுத்தல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com