தொழிலாளா் ஊதியம் கடும் சரிவு: காங்கிரஸ்

‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தொழிலாளா்கள் ஊதியம் கடும் சரிவை சந்தித்துள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தொழிலாளா் ஊதியம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழிலாளா்களின் வாங்கும் திறன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று அல்லாமல், தற்போது வெகுவாகக் குறைந்திருப்பதை மத்திய பாஜக அரசின் புள்ளிவிவரங்கள் உள்பட பல்வேறு புள்ளி விவர தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பணவீக்கம் அதிகரிப்பு, தாமதமான ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலாளா்களின் ஊதியம் கடுமையாக சரிவடைந்துள்ளது.

தொழிளாலா் அமைப்பின் ஊதிய விகித குறியீடு (அரசு புள்ளி விவரம்) புள்ளி விவரத்தின்படி, 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு என்பது தேக்க நிலையை அடைந்ததோடு, பிரதமா் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் ஊதியம் கடும் சரிவை கண்டிருப்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய தேக்கம் அல்லது சரிவு காரணமாக, தொழிலாளா்களின் நுகா்வு குறைந்ததோடு, கிராமப்புற நுகா்வும் 50 ஆண்டுகள் இல்லாத அளவில் சரிந்தது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com