மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் கட்சி மதம் சார்ந்து பிரிவினையை ஏற்படுத்துவதாக ராஜ்நாத் சிங் விமர்சனம்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் கட்சி மதம் சார்ந்து பிரிவினையை ஏற்படுத்துவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கெளதமபுத்த நகரில் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

''பிரதமர் நரேந்திர மோடியை நீண்ட நாள்களாகத் தெரியும். மதம் சார்ந்த அரசியலை ஒருபோதும் அவர் செய்வதில்லை. மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி.

மதம் சார்ந்து பிரிவினையை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சிதான்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜாமியா இஸ்லாமிய பல்கலைக் கழகம் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. முஸ்லீம்களுக்கு 6 சதவிகிதம், சிறுபான்மையினருக்கு 2 சதவிகிதம் உள்பட ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் அளிக்கும் வகையில் பலவேறு கமிஷன்களை காங்கிரஸ் உருவாக்கியது.

ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

ஹிந்து, முஸ்லீம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சியை அமைத்தது காங்கிரஸ். ஆனால், பாஜக ஆட்சி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுடன் நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டுசெல்லும் முனைப்பில் உள்ளது.

சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி இதிலிருந்து தொடங்கியுள்ளது.

இது ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் மற்ற கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பலமுறை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் மக்களவைத் தொகுதி வேட்பாளர் போட்டியின்றி வென்றால் ஜனநாயகம் வலுவாக உள்ளதாகக் கூறும் காங்கிரஸ், பாஜகவின் வேட்பாளர் போட்டியின்றி வென்றால் மட்டும் ஜனநாயகத்தை பலவீனமாக்கிவிடுகிறது.

2012ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கன்னெளஜ் தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியின்றி மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். காங்கிரஸும், சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதில் ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தலை காணவில்லை'' என ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com