பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

குமாரசாமி  (கோப்புப் படம்)
குமாரசாமி (கோப்புப் படம்)

பாலியல் புகாரில் சிக்கிவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு தொகுதியான ஹாசனில் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக, தேவகௌடாவின் பேரனும் ம.ஜ.த. கட்சித் தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனும், எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டார். இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான காணொளிகளும் இணையத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வாலால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவதால் இதுகுறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததாலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் ம.ஜ.த. தலைவர் பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தன் அந்தரங்க விடியோக்களை செய்தி நிறுவனங்களோ இணையதளங்களிலோ வெளியிடக்கூடாது என்பதற்கான நீதிமன்ற தடை உத்தரவை கடந்த ஆண்டே பிரஜ்வால் ரேவண்ணா பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பிரஜ்வாலின் தந்தை ஹெச்.டி. ரேவண்ணாவும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ரேவண்ணா மற்றும் பிரஜ்வால் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.

குமாரசாமி  (கோப்புப் படம்)
பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் பெண்களை மதிக்கிறோம். எனது பெயரையோ, தேவகௌடாவின் பெயரையோ இதில் சேர்க்க வேண்டாம். ரேவண்ணா விவகாரம் பற்றி இப்போது தெரிந்து கொண்டோம், முன்பே தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். இந்த விடியோக்கள் குடும்பம் மற்றும் சமூகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மை வெளிவரட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com