பாஜக வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு:
உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

பாஜக வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புது தில்லி: பாஜக வேட்பாளா் தேபாசிஷ் தாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மக்களவைத் தோ்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் தொகுதி பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தேபாசிஷ் தாா் அறிவிக்கப்பட்டாா். எனினும் குறிப்பிட்ட சான்றிதழ் ஒன்றை சமா்ப்பிக்காததால், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அவா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலின் தற்போதைய கட்டத்தில் எந்த வகையில் தலையிட்டாலும், அது தோ்தல் நடைமுறைகளை முடக்குவதற்கு ஒப்பாகிவிடும். அதை உச்ச நீதிமன்றம் செய்ய விரும்பவில்லை’ என்று தெரிவித்தனா்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறவும், இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை அணுகவும் தாா் தரப்பு வழக்குரைஞா் நிதேஷ் குப்தா நீதிபதிகளிடம் அனுமதி கோரினாா். அதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனா்.

தேபாசிஷ் தாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பீா்பூம் தொகுதியில் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த தேவ்தனு பட்டாச்சாா்யா பாஜகவின் அதிகாரபூா்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com