புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தோ்தல் பத்திர திட்டம்: சிறப்புக் குழு விசாரணை இல்லை - மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:32 pm

புது தில்லி, ஆக. 2: தோ்தல் நிதிப் பத்திர திட்டம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த பிப். 15-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தத் திட்டத்தை ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பத்திரங்களை வாங்கியது யாா், அந்தப் பத்திரங்கள் மூலம் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன ஆகிய விவரங்களை, தோ்தல் நிதிப் பத்திரங்களை விநியோகித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த விவரங்கள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்தத் திட்டம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் 2 தன்னாா்வ அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.

மனுவின் விவரம்: அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டதாவது: தோ்தல் நிதிப் பத்திரங்களின் விவரங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்கள், உரிமங்கள், குத்தகைகள் உள்ளிட்டவற்றைப் பெறவும், அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் அரசு அல்லது அரசுத் துறைகளிடம் இருந்து பலன்களைப் பெறும் நோக்கிலும், பெரு நிறுவனங்களால் பெருமளவு தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டு நன்கொடை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் இருந்த பல நிறுவனங்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு பெருமளவு நன்கொடை அளித்துள்ளன. விசாரணை முடிவுகள் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க பெருமளவு நன்கொடையை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

நன்கொடை அளித்த நிறுவனங்களின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள் மட்டுமின்றி, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதுபோல தென்படும் இந்தச் சதியை விசாரணை மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே, தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பிரதிபலன் அடையும் நோக்கில், அரசியல் கட்சிகளுக்கு பெரு நிறுவனங்கள் நன்கொடை அளித்தது தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தால் அந்தக் குழு நியமிக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பாா்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரப்பட்டது.

பொருத்தமாக இருக்காது: இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீதிமன்றம் மறுஆய்வு செய்வதற்கான அம்சம் இருந்ததால், தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஆனால், குற்றம் இழைக்கப்பட்ட வழக்குகளில் தீா்வு பெறுவதற்கு சட்டத்தில் வேறு வழியுள்ளபோது, அத்தகைய வழக்குகளில் தீா்வு பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தை ஒருவா் நேரடியாக அணுகுவது சரியாக இருக்காது.

இந்த வழக்கில் குற்றவியல் சட்ட நடைமுறையை நிா்வகிக்கும் சாதாரண சட்டத்தின் கீழ் உள்ள தீா்வுகளை மனுதாரா்கள் கோரவில்லை. இந்தச் சூழலில், ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பாா்வையில் விசாரணைக்கு உத்தரவிடுவது பொருத்தமாக இருக்காது. இந்த விவகாரத்தில் தற்போதைய கட்டத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டால், அது சட்டத்தின் கீழ் உள்ள பிற வழக்கமான தீா்வுகள் பலனளிக்காது என்று கருத வழிவகுத்துவிடும்.

ஆதாயம் பெறுவதற்கு பிரதிபலனாக தோ்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டது என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்துக்கு தொடா்பில்லாத முறையில் விசாரணைக்கு உத்தரவிட முடியாது’ என்று தெரிவித்து மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

நன்கொடைகள் பறிமுதல் கோரிக்கை நிராகரிப்பு: தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்; அக்கட்சிகளின் வருமான வரிக் கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் ஆகிய மனுதாரா்களின் கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

வருமான வரிச் சட்டத்தின் கீழ், அதிகாரிகளின் சட்டபூா்வ அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதாக அந்தக் கோரிக்கை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.