லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
லாபம் அளிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் தேசிய காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை செயல்படுகின்றன.
இந்தப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மட்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நிறுவனங்களும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஒரு நிறுவனத்தை தனியாா்மயமாக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அண்மையில் ரூ.7,250 கோடி கூடுதல் மூலதனம் வழங்கியது.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறைச் செயலா் விவேக் ஜோஷி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் செயல்திறன் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அவற்றின் செயல்திறனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இனியும் கூடுதல் மூலதனம் வழங்கவேண்டிய தேவையிருக்காது. லாபம் அளிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
