கட்டாய காப்பீடு விற்பனை - வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...


வரவேற்கலாம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டாயக் காப்பீடு விற்பனை செய்வதைத் தவறு என்று எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. காப்பீடு என்பது மிகவும் அவசியமானதுதான். அதை தேவைப்படுபவர்களே விருப்பப்பட்டு மேற்கொள்ள வேண்டுமே தவிர அதைக் கட்டாயப்படுத்தினால் அதன் மீது ஒரு வெறுப்புதான் வரும். மக்கள் அவசர தேவைக்காக கடன் வாங்க வங்கிகளுக்கு வரும்போது இதுபோன்ற காப்பீடுகளைக் கட்டாயமாக வாடிக்கையாளர்கள் மீது திணிக்கும்போது, வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கைக்கூட குறைய வாய்ப்புள்ளது.
உஷா முத்துராமன், மதுரை.
அரசின் கண்காணிப்பு
வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்திருப்பது சரியே. காப்பீட்டுத் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் தவறான தகவல்களைக் கூறித் திணிப்பது சரியான நடைமுறையல்ல. வங்கிகள் காப்பீட்டு முகவர்களைப் போலச் செயல்படுவதைத் தவிர்த்து, வைப்புகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது சரியே. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வங்கிகள் இப்படி தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. மத்திய அரசும் வங்கிகளைக் கண்காணிக்க வேண்டும். சட்ட விதிகளைப் பின்பற்றாத வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
தனியார்மயத்தின் விளைவு
வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் தனியார்மயமானதுதான் இத்தகைய மோசடி வணிகங்களின் பெருக்கத்துக்குக் காரணம். காப்பீட்டுத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். வங்கிகளும் தங்களது செயல்பாடுகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கைப்பேசி விளம்பரங்களில் காப்பீடு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை ஓய்வில்லாமல் திணித்து அப்பாவி மக்களை ஏமாற்றுவதைக் கண்டிப்பதுடன், கடுமையான தண்டனைகளை விதிக்கவேண்டும்.
எம்.எஸ்.நளினி, புட்டபர்த்தி.
பாதிப்பு இல்லை
இந்திய வங்கிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தி காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. நடைமுறையில் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்மை பயக்கும் தொலைநோக்குப் பார்வையுடன்தான் செயல்படுகின்றன. மேலும், காப்பீட்டு பிரீமியத்தொகை "ஆட்டோ டெபிட்' முறையில் காலம் தவறாமல் வங்கியே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செலுத்திவிடுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. வங்கிகளின் காப்பீட்டு பாலிசி நடைமுறைகளை வரவேற்கலாம்.
கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
கட்டாய காப்பீடு விற்பனை
கட்டாயக் காப்பீடு என்பது திணிக்கப்படுவதாக இருக்கிறது. ஒரு தனி நபரோ நிறுவனமோ விருப்பப்பட்டால் மட்டுமே காப்பீடு வழங்கலாம். விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தி காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது என்பது அவர்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயலாகும். தனி நபர்களுக்கு பாதுகாப்பு என்றாலும் அது ஒவ்வொரு அமைப்பு மற்றும் தனி நபரின் விருப்பம் சார்ந்தது என்பதை வங்கிகள் உணர்வது நல்லது. கட்டாயக் காப்பீடு குறித்து மத்திய நிதிஅமைச்சரின் எச்சரிக்கையை வரவேற்கலாம்.
மா. பழனி, கூத்தப்பாடி.
வரவேற்கத்தக்கது
சேமிப்புகளை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் கடன்களை வழங்குவதே வங்கிகளின் பிரதான பணியாக இருத்தல் வேண்டும். கட்டாயப்படுத்தி காப்பீடு தொடர்பான சேவைகளை விற்பனை செய்வது ஏற்புடையதல்ல. காப்பீடு விற்பனை என்பது, வங்கிகள் செய்ய வேண்டிய பணி அல்ல. எந்த வகையிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வங்கிகள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதை மீறும் வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
லாப நோக்குடன்...
பெரும்பாலான வங்கிகள் வர்த்தக நோக்குடன் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய வற்புறுத்துவது தற்போது இயல்பாகிவிட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் முக்கிய குறிக்கோளே அவை லாப நோக்குடன் மட்டும் இயங்காமல், வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவையளிப்பதை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான். வருமானத்துக்காகத் தவறான தகவல்களைக் கூறி வாடிக்கையாளர்களை திசை திருப்பி ஆதாயம் தேட முயல்வது நியாயமாகாது. மத்திய நிதியமைச்சரின் எச்சரிக்கை இன்றைய சூழலில் மிக அவசியமானதே!
கே. ராமநாதன், மதுரை.
காப்பீட்டுக்கு முன்னுரிமை
வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் வங்கிப் பணியைவிட காப்பீட்டு பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். காப்பீட்டுத் திட்டங்களால் அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது; வங்கிப் பணியில் கவனம் குறைகிறது; வங்கிகளில் வைப்புத் தொகை முதலீடு பெறுவதில் ஆர்வம் குறைகிறது; வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது; மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற நிதியமைச்சரின் எச்சரிக்கை பயனுள்ளதாக அமையும்.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
நிர்ப்பந்தம் தவிர்க்கலாம்
கட்டாய காப்பீடு என்று மக்கள் மீது திணிப்பது கூடாது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமனின் எச்சரிக்கை வரவேற்கத்தக்கது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட்டுகளை வாங்கி அதை பொதுமக்களுக்கு கடனாக வழங்குவதை மட்டுமே தங்களுடைய குறிக்கோளாக கொள்ள வேண்டுமே தவிர, கடன் வாங்க வருபவர்களிடம் எல்லாம் கட்டாயமாக காப்பீடு எடுக்கச் சொல்வது, அவர்களை ஒரு நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்குவதுபோல ஆகிவிடும். மத்திய நிதி அமைச்சரின் இந்த செயல் மக்கள் மீதிருக்கும் அக்கறையை பிரதிபலிக்கிறது.
பிரகதாம்பாள், கடலூர்.
விழிப்புணர்வு அதிகரிக்கும்
நிர்மலா சீதாராமன் கூறிய வங்கிகளின் கட்டாய காப்பீடு பற்றிய கருத்து ஏற்புடையது. இந்தக் கட்டாய காப்பீடு காலம் காலமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், சிறு வங்கிகள் மற்றும் சில வங்கி சாரா கடன் நிறுவனங்கள் தங்களது சேவைக்காகவும் தாங்கள் வழங்கும் கடனுக்காகவும் நிர்ப்பந்திப்பது நடந்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கும். பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வங்கிகளில் சேவை பெறவும் கடன்களைப் பெறவும் அணுகும்போது காப்பீட்டை கட்டாயமாக்காமல் இருக்கவும் வழி வகையாக அமையும்.
கி.செந்தில் கிருஷ்ணன், நாகப்பட்டினம்.
நியாயமான கேள்விகள்
காப்பீடு குறித்து வாடிக்கையாளர்களிடம் உரிய தகவல்களை வங்கிகள் தெரிவிக்காமல் முதலீட்டாளர்களை காப்பீடு பெறச் சொல்வது கவலை அளிக்கிறது. தவறான தகவல்களைக் கூறி வாடிக்கையாளர்களிடம் நிதி சேவைகளை வங்கிகள் விற்பது சட்டப்படி குற்றமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருப்பது வாடிக்கையாளர்களை நிம்மதி அடையச் செய்திருக்கிறது. நிலம் அல்லது சொத்துகளை விற்கும்போதோ அல்லது அடமானம் வைக்கும்போதோ எதற்காக காப்பீடு எடுக்க வேண்டும் என்று குடிமக்கள் கேட்பது நியாயம்தானே? "
என் வி சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
காப்பீட்டு நிறுவன தவறு
வங்கிகளில் முதலீடு செய்யவும் கடன் வாங்கவும் வருபவர்களை காப்பீட்டு திட்டங்களின் சாதக பாதகங்களை முறையாக எடுத்துக் கூறாமல் விற்பனை செய்வது தவறுதான். இதன் பாதிப்புகளை பத்து ஆண்டுகள் கழித்தாவது நிதியமைச்சர் வங்கிகளுக்கு அறிவுறுதியிருப்பது மகிழ்ச்சி. கல்வியில் கரை கண்டவர்கள் கூட காப்பீட்டு நிறுவனங்களின் சட்ட திட்டங்களை முழுதும் படித்து அதில் முதலீடு செய்ய இயலாது. அதனால் காப்பீட்டு நிறுவனங்களைத் தான் குறை சொல்ல வேண்டுமே தவிர வங்கிகளை மட்டும் குறை சொல்வதும் தவறு.
த. சேகர், பீர்க்கன்கரணை.
எச்சரிக்கை சரிதான்
வாகனம், தனி நபர், வீடு கட்ட என்று கடன் கேட்டு வருபவரிடம், காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வங்கிகள் காப்பீடு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. காப்பீடு எடுக்காவிட்டால் கடன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நோக்கில், ஏற்கெனவே தனது பெயரில் காப்பீடு இருந்தாலும், புதிதாக ஒரு காப்பீடு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். காப்பீடு என்பது தனிநபர்; விருப்பத்திற்கு உட்பட்டது . ஆசை வார்த்தை காட்டி கட்டாயப்படுத்தக் கூடாது. மீறி இந்தக் காப்பீடு எடுக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுவது சட்டப்படி குற்றம் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தும் , வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் சரியே.
ர. சண்முகம் ரங்கசாமி, ஈரோடு.
நடவடிக்கை தேவை
நிதி அமைச்சகத்தின் கீழ்தான் ரிசர்வ் வங்கியும், அதன் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இந்தியாவின் அனைத்து வங்கிகளும் செயல்படுகின்றன. இந்நிலையில் மக்கள் தங்கள் சொத்துகளை விற்கும்போதும், அடமானம் வைக்கும்போதும் எதற்காக காப்பீடு எடுக்கவேண்டும்? என்று அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பதாகவும், இதனால் ரிசர்வ் வங்கிக்கும், ஐஆர்டிஏ க்கும் முரண்பாடு ஏற்படுவதாகவும் நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுக்கிறார். விதிகளை மீறி மக்கள் பாதிக்கப்படுவது உண்மையென்றால் எச்சரிக்கை தேவையில்லை. வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான் நிதி அமைச்சரின் பொறுப்பு.
கருப்பையா, பொன்னமராவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...