
வங்கதேசத்தில் சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதனை அந்நாட்டு ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஸமான் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே வங்கதேசத்தின் இடைக்கால அரசு, சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் ஆகியோர் தலைமையில் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சலிமுல்லா கான் என்பவர் வங்கதேச எழுத்தாளர், ஆசிரியர். ஆசிஃப் நஸ்ருல் என்பவர் டாக்கா சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்.
வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறையால், ஹேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால பிரதமர் பதவி முடிவுக்கு முற்று பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்ததாலும் கலவரம் பெரிதானதாலும், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளிநாடுக்குத் தப்பினார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்த அவர், அங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசத்தில் சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் வஹாப் மியா, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இக்பால் கரீம் பூஹியான், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சையத் உத்தின் ஆகியோர் பேரும் இடைக்கால பிரதமர் பெயருக்கான பரிந்துரைப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.