மாநிலங்களவையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவையை விட்டு வெளியேறினார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், நேற்று(புதன்கிழமை) காலை செய்யப்பட்ட உடல் பரிசோதனையில், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மக்களவையில் மன்சுக் மாண்டவியா நேற்று விளக்கம் அளித்தார். எனினும், மாநிலங்களவையில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மறுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் அவைத் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பினர்.
அப்போது ஜகதீப் தன்கர், 'எவ்வளவு தைரியம் உங்களுக்கு? உங்கள் நடத்தை அசிங்கமானது, உங்கள் செயலை நான் கண்டிக்கிறேன், அடுத்த முறை செய்தால் வெளியே அனுப்புகிறேன்' என்று கூறினார்.
அதுபோல தன்னை நோக்கி சிரித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷையும் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையில் தனக்கு கிடைக்கவேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறி ஜகதீப் தன்கர் வெளியேறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் சிறிது நேரம் அவைத் தலைவர் இன்றி மாநிலங்களவை இருந்தது. பின்னர் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வந்து சிறிது நேரம் அவைக்கு தலைமை தாங்கினார்.
முன்னதாக ஜகதீப் தன்கர் பேசுகையில், 'இந்திய ஜனநாயகத்தை தாக்குவது, அவைத் தலைவர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்துவது, என இந்த புனிதமான அவையை அராஜகத்தின் மையமாக்குவது அநாகரீகமானது மட்டுமல்ல, அனைத்து வரம்புகளையும் மீறியது. வார்த்தைகள், கடிதங்கள், செய்தித்தாள்கள் மூலமாக சவால் விடுவதை சமீப நாள்களில் பார்த்து வருகிறேன். எத்தனை தவறான கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இது எனக்கான சவால் அல்ல, இந்த பதவிக்கு கொடுக்கப்படும் சவால். இந்தப் பதவியில் இருப்பவர் அதற்குத் தகுதியானவர் அல்ல என அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கருதுவதால் கொடுக்கப்படுகிறது' என்று கூறிவிட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு அவையை விட்டுச் சென்றார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கைகளுக்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர், 'அவையில் சற்றுமுன் நடந்தது முன்னெப்போதும் நிகழாதது, ஜீரணிக்க முடியாதது. சில நேரங்களில் கடுமையான முடிவு எடுக்க வேண்டியது கடமையாகும்' என்றார்.
அதுபோல வினேஷ் போகத் விவகாரம் குறித்து முன்னதாக அவர் பேசுகையில், 'நீங்கள் மட்டும்தான் வருத்தத்தில் இருக்கிறீர்களா? குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, நான் உள்பட ஒட்டுமொத்த நாடுமே வருத்தத்தில் உள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை அரசியலாக்க வேண்டாம். இதனை அரசியலாக்குவது அவரை அவமரியாதை செய்வது போன்றது. அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும்' என்றார்.
மேலும், வினேஷ் போகத்துக்கு பதக்கம் வென்றவருக்கான மரியாதை, வெகுமதி வழங்கப்படும் என ஹரியாணா அரசு கூறியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.