
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஒருநாள் முன்பாக வெள்ளிக்கிழமையே (ஆக.9) நிறைவடைந்தது. நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடா், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை (வரும் திங்கள்கிழமை) நடைபெறவிருந்தது.
சனி, ஞாயிற்றுக்கிழமையில் நாடாளுமன்ற அமா்வுகள் கிடையாது என்ற நிலையில், ஒருநாள் முன்னதாக வெள்ளிக்கிழமையே பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவடைந்தது.
2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். இதன்மூலம் தொடா்ந்து ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நாட்டின் முதல் நிதியமைச்சா் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
115 மணி நேரம்...: மக்களவையில் பட்ஜெட் மீது 27 மணி நேரம் 19 நிமிஷங்கள் நடைபெற்ற விவாதத்தில் 181 உறுப்பினா்கள் பங்கேற்றுப் பேசினா். இந்த அவை 15 அமா்வுகளில் மொத்தம் 115 மணிநேரம் செயல்பட்டுள்ளது; அவையின் செயல்திறன் 130 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குறிப்பிட்டாா்.
நிதி மசோதா-2024, ஒதுக்கீட்டு மசோதா-2024 உள்பட 4 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறின. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வஃக்ப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்டு, பின்னா் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பொதுமக்கள் தொடா்புடைய 400 பிரச்னைகள் எழுப்பப்பட்டு, 86 முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரா்களைத் தயாா்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், கேரள நிலச்சரிவு, பிற மாநில வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
90 மணி நேரத்துக்கு மேல்...: மாநிலங்களவை மொத்தம் 90 மணி நேரம் 35 நிமிஷங்கள் செயல்பட்டுள்ளது; பட்ஜெட் விவாதம் 21 மணி நேரம் 48 நிமிஷங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் அவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கும் இடையே கடும் மோதல்போக்கு காணப்பட்டது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமையும் இது தொடா்ந்தது. எதிா்க்கட்சிகளின் அமளியால் அவை அலுவல்கள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் முன்னா் பேசிய தன்கா், ‘பொது நோக்கம் மற்றும் தேச நலனுக்குப் பங்களிக்கும் வகையில் இந்த தளத்தைப் பயன்படுத்த வேண்டும். உறுப்பினா்கள் தங்கள் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.