
கொல்கத்தாவில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருத்தரங்கு வளாகத்தில் பெண் மருத்துவர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அந்த அறைக்குச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா வடக்கு மற்றும் வடக்கு புறநகர் பிரிவின் துணை ஆணையர் அபிஷேக் குப்தா தலைமையிலான குழுவும், நகர காவல் ஆணையர் வினீத் குமார் கோயலும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த மருத்துவர், மார்பகப் பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவராகப் படித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், ``மருத்துவரின் உடலில் காயங்கள் உள்ளது; அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு வெளிவந்த பிறகே, மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும்’’ என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும் மேற்கு வங்க பாஜகவின் மத்தியப் பார்வையாளருமான அமித் மால்வியா, தனது எக்ஸ் பக்கத்தில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அமித் மால்வியா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, "கொல்கத்தாவில் உள்ள ஒரு முன்னணி அரசு மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் அறையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசு, இந்தக் குற்றத்தை மறைக்க முயற்சிக்கிறது.
இந்த சம்பவத்தை மூடிமறைக்கவும், கொலையை தற்கொலை என்று காட்டவும், கொல்கத்தா காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லை" என்று கூறியுள்ளார்.