பழவேற்காடு பகுதியைச் சுற்றிலும் உள்ள 8 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1 லட்சம் மக்கள், அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
பழவேற்பாடு (புலிகாட்) அரசு மருத்துவமனையில், ஒரு லட்சம் மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து கையாளுநர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதனால், கிராம மக்கள் சிகிச்சைக்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரி தாலுகா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலையோ அல்லது வெறும் எக்ஸ்-ரே பரிசோதனைக்காக சென்னைக்கோ செல்லும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
பழவேற்காடு, கோட்டைகுப்பம், களங்கரைவிளக்க குப்பம், அவுரிவாக்கம், திருப்பாலைவனம் உள்ளிட்ட 6 கிராம பஞ்சாயத்துகளுக்கு உள்பட்டு 60 கிராமங்கள் உள்ளன. இங்கிருக்கும் அனைவருமே பழவேற்காடு மருத்துவமனையை நம்பித்தான் இருக்கிறார்கள்.
இங்கு நாள்தோறும் 450 புறநோயாளிகளும், 20 உள்நோயாளிகளும் சிகிச்சைபெற்று சென்றாலும், ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். இங்கு எக்ஸ்ரே கருவி இருக்கிறது. எக்ஸ்ரே எடுக்க ஆள் இல்லை. நோயாளி யாருக்கேனும் எக்ஸ்ரே, இசிஜி, ஒரு சிறிய அறுவைசிகிச்சை என்றாலும் கூட அவர்கள் பொன்னேரி தாலுகா மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். இங்கு எதையும் செய்ய முடியாது.
இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை அரசு ஒதுக்கியிருந்தாலும் கூட, இங்கு ஒரே ஒரு பொது மருத்துவர்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அதுவும், மற்றொரு அரசு மருத்துவமனையில் முந்தைய நாள் இரவு அவசர மகப்பேறு சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அங்கு மருத்துவர் சென்றுவிட்டதால், மறுநாள் இந்த மருத்துவமனைக்கு அவரால் தாமதமாகத்தான் வர முடிகிறது. அதுவரை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை செவிலியரே கவனித்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது.
மருத்துவமனையில் இரவுப் பணியில் மருத்துவர் யாரும் இருப்பதில்லை, செவிலியர் மட்டுமே, அவசர சிகிச்சையாக இருந்தால், அவர் பொன்னேரி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுவார். அங்கும் சமாளிக்க முடியவில்லை என்றால், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள் என்று புகார் கூறுகிறார்கள் மக்கள்.
இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் அடிதடியில் சிக்கியவர், விஷம் குடித்து, சாலை விபத்தில் சிக்கியவர்கள், நெஞ்சு வலி என பல்வேறு பிரச்னைக்காக வருகிறார்கள். மீனவர்களும் ரத்தக் காயத்துடன் வருவது உண்டு.
இரவில் யார் வந்தாலும், செவிலியர் சில மாத்திரைகளைக் கொடுத்து காலையில் வரச்சொல்லிவிடுவார். இதுதான் எந்த அவசர சிகிச்சையாக இருந்தாலும் ஒரே சிகிச்சை முறை. யாராவது மிகவும் மோசமான நிலையில் இருந்தால், அவர்கள் மறுநாள் காலையில் உயிரோடு மருத்துவமனைக்கு வருவார்கள் என்று எந்த நம்பிக்கையில் செவிலியல் நாளை வரச் சொல்கிறார் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
அது மட்டுமல்ல, இங்கு சிகிச்சைக்கு வந்தால், மருத்துவர் இல்லாத நேரத்தில், செவிலியர்தான் சிகிச்சையும் அளித்து, மருந்தகத்திலிருந்து மருந்தும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதால், நீண்ட நேரம் ஆகிறது. இங்கு மருந்தாளுநரும் இல்லை என்பது மிகப்பெரிய பிரச்னை.
இது குறித்து பொதுவாகக் கூறப்படுவது என்னவென்றால், இங்கு போதுமான மருத்துவர்கள் ஒதுக்கப்பட்டாலும் அவர்கள் இங்கு அதிக காலம் தங்குவதில்லை. இதர மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இங்கு மூன்று மருத்துவர்கள் இருப்பதாகவும், ஒருவர் கும்மிடிப்பூண்டி தாலுகா மருத்துவமனைக்கு பணிக்குச் சென்றிருப்பதாகவும், மற்றொருவர் முதன்மை மருத்துவ அதிகாரி, அவர் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற இதரப் பணிகளுக்குச் சென்றுவிடுவார், மற்றொரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு பொதுவாக உள் நோயாளிகள் அதிகம் இருப்பதில்லை. எனவே, தேவையெனில் மருத்துவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள். மனிதவளம் பற்றாக்குறையாக உள்ளது. அண்மையில் 1000 மருத்துவர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு, இங்கு யாரும் அனுப்பப்படவில்லை, பெரும்பாலான டாக்டர்கள் கிராமப் பகுதிகளில் பணியாற்றவே விரும்புவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.