ராய்ப்பூர்: ராய்ப்பூரில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஒரு வங்கதேச விமானம் இன்னமும் இங்கேயே நின்றுகொண்டிருக்கிறது.
விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து முயன்றும் மேற்கொண்டு என்ன செய்வதென விசாரித்தும் இதுவரை எந்த பதிலும் வராததால், ஒரே இடத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த யுனைடெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்பது ஆண்டுகளாக நிற்கிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் வன்முறை வெடித்து, தற்போது ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்து யூனுஸ் தலைமையின் கீழ் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானத்தை வங்கதேச யுனைடெட் ஏர்வேஸ் மறந்தேபோயிருக்கும் நிலையில், இது தற்போது மிகப் பெரிய இரும்புக் கழிவாக மாறியிருக்கிறதே தவிர, வானில் பறப்பதற்கான தரத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானம் குறித்து வங்கதேசத்திலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் இந்த விமானத்தை நிறுத்திவைத்திருக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ. 320 வாடகைக் கட்டணம். இந்த கட்டணமே இதுவரை ரூ. 4 கோடியை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தனியார் விமான நிறுவனத்துக்கு இந்தக் கட்டண பாக்கி நிலுவையில் இருப்பது தெரியுமா என்றுகூட தெரியவில்லை.
இது எப்படி இந்தியா வந்தது?
யுனைடெட் ஏர்வேஸ் விமானம், கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி 173 பயணிகளுடன் டாக்காவிலிருந்து புறப்பட்டு மஸ்கட் சென்றுகொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராய்ப்பூரில் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தின் ஒரு என்ஜின் பழுதடைந்திருந்தது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்காவிலிருந்து விமானம் புறப்பட்டதும், வாராணசி - ராய்ப்பூர் வான்வெளியில் இருந்தபோது, அதிகப்படியான அழுத்தத்தை சந்தித்து இந்த என்ஜின் வெடித்தது. இது பற்றி யுனைடெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி கேப்டன் கூறுகையில், விமானம் 32,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தீப்பற்றி நொறுங்கியது. எங்களுக்கு அந்த சப்தம் கேட்டது, விமானம் ஆடியது, அந்த நேரத்தில், விமானத்திலேயே விமானப் பொறியாளர்கள் இருந்ததால் நாங்கள் உயிர் தப்பினோம் என்கிறார்.
விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விமானப் பொறியாளர்கள் குழுவினர் வங்கதேசத்திலிருந்து வந்து தொழில்நுட்பப் பிரச்னையை சரி செய்தனர். விமானம் பறக்கத் தயாரானது. ஆனால், அதன் பிறகும் விமானத்தை டாக்காவுக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, எந்தத் துறையைத் தொடர்புகொள்வது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது. அது மட்டுமல்ல, வெளிநாட்டு விமானம் ஒன்று, இந்தியாவில் அதிக காலம் நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. வங்கதேச விமானம் நீண்ட நாள்களாக இங்கு நிறுத்ப்பட்டிருப்பது குறித்து விரைவில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் உரிமையாளரான யுனைடெட் ஏர்வேஸ் நிறுவனமும், தனது விமான சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டு, நிறுவனத்தையே மூடிவிட்டுப் போய்விட்டது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வங்கதேச விமானமும், யாருக்கும் இடையூறு இல்லாத இடத்துக்கு நகர்த்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமானம் இங்கு நின்று கொண்டிருப்பதற்கான வாடகைக் கட்டணமே ரூ. 4 கோடியை எட்டிவிட்டது. இந்தக் கட்டணத்தை அந்த நிறுவனத்தின் சார்பில் யாராவது இந்தியாவுக்குக் கொடுத்து விமானத்தை எடுத்துச் செல்வார்களா? அல்லது மத்திய அரசே ஏதேனும் முடிவுக்கு வந்து நடவடிக்கை எடுக்குமா? எதற்கும் உதவாத நிலையை எட்டிவிட்ட விமானத்தை நேரடியாக பழைய இரும்புக் கடைக்கே அனுப்பிவிடுவார்களா? அல்லது அடையாளச் சின்னமாக இங்கே நின்றுகொண்டிருக்குமா? விமானத்தின் எதிர்காலம் என்ன என்பதெல்லாம் கேள்விகளாகவே தொக்கி நிற்கின்றன.