தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் இன்று சந்தித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த மனு பாக்கர், புதன்கிழமை தில்லி திரும்பினார். தில்லி விமான நிலையித்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மனு பாக்கர் குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கான மக்களும் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியேவும் அவருக்கு பலரும் பூங்கொத்துகள், மாலைகள் அணிவித்து கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். அவரை வரவேற்ற ரசிகர்களுக்கு மனு பாக்கர் தான் வென்ற பதக்கங்களைக் காட்டினார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர் மனு பாக்கர்தான்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளன. இந்த நிலையில் தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் இன்று சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமை சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் மனு பாக்கர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.