இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், செபியின் தலைவா் மாதவி புரி புச் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டது.
இந்த விவகாரம் கடந்த இரண்டு நாள்களாக இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தரப்பில் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.
தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பேசியதாவது:
“இந்திய மக்களால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் நிராகரிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை ஏற்படுத்தி சீர்குலைக்க சதி செய்கின்றனர். ஹிண்டன்பர்க்கின் அறிக்கை சனிக்கிழமை வெளியாகிறது, ஞாயிற்றுக்கிழமை சலசலப்பு ஏற்படுகிறது, இதனால் திங்கள்கிழமை பங்குச் சந்தை சீர்குலைந்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. சந்தை சீராக நடைபெறுவதை உறுதி செய்வது செபியின் பொறுப்பாக இருக்கிறது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, உச்சநீதிமன்ற மேற்பார்வையில் கடந்த ஜூலை மாதம் முழு விசாரணை முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் எதுவும் பேசாதவர்கள், தற்போது ஆதாரமற்ற தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஜார்ஜ் சோரோஸ்தான் ஹிண்டன்பர்க்கின் முதலீடு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்புணர்ச்சியில், இந்தியா மீது காங்கிரஸ் வெறுப்பை வளர்த்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை சீர்குலைந்தால் சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்கள். ஒட்டுமொத்த பங்குச்சந்தையையும் நொறுக்க காங்கிரஸ் விரும்புகிறது. சிறுமுதலீட்டாளர்கள் முதலீட்டை நிறுத்தவும், இந்தியாவில் பொருளாதார முதலீடுகள் இருக்கக் கூடாது என்றும் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மேற்கு வங்க பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரவி சங்கர், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.