தமிழகத்திற்கு கூடுதலாக 97 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடகம் கூறியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்கற்றுக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அவ்வப்போது இந்த இரு அமைப்புகளின் கூட்டமும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 101 -வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காணொலி வழியாக நடைபெற்றது.
கர்நாடகம், தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநில அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நடப்பு மாதமும் கர்நாடகம் வழங்க வேண்டிய நீரை திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை கூடுதலாக 97 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களில் பெய்த கனமழை காரணமாக காவிரி நீர் தமிழகத்திற்கு அதிகம் கிடைத்துள்ளது.