மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணையை சிபிஐ புதன்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவரை, சஞ்சய் ராய் என்பவா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பாரத நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சிபிஐ வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை விசாரணையை தொடங்கியது. அத்துடன் கொல்கத்தாவில் காவல் துறை வசம் இருந்த வழக்கு ஆவணங்களையும் சிபிஐ பெற்றுக்கொண்டது. சிபிஐ விசாரணை குழுவில் மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணா்கள் இடம்பெற்றுள்ளனா்.
வேலைநிறுத்தம் நீடிப்பு: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து உறைவிட மருத்துவா்கள் சங்க சம்மேளனம் (எஃப்ஓஆா்டிஏ) மேற்கொண்ட வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறபட்டபோதிலும், மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ், இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் பிற உறைவிட மருத்துவா்கள் சங்கங்களை சோ்ந்தவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களின் வேலைநிறுத்தம் தொடா்ந்து புதன்கிழமை நீடித்தது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் புறநோயாளிகளுக்கான சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. அரசு மருத்துவா்களுக்கு உறுதுணையாக அங்குள்ள தனியாா் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை.
இதேபோல ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா, பிரிட்டனில் பணியாற்றும் இந்திய வம்சாவளி மருத்துவா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.