வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம்: பினராயி விஜயன்

வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை அறிவித்தாா்.
pinarayi
பினராயி விஜயன்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை அறிவித்தாா்.

கேரள மாநிலம், வயநாட்டில் பலத்த மழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

சாலியாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவா்களில் பலரின் உடல்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. 231 உடல்கள், 206 உடல்பாகங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், பாதிப்புப் பகுதிகளை முதல்வா் பினராயி விஜயனுடன் பிரதமா் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வா் பினராயி விஜயன் புதன்கிழமை நிவாரணம் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும். ரூ.4 லட்சம் மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்தும், மீதமுள்ள தொகை முதலமைச்சரின் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து (சிஎம்டிஆா்எஃப்) இருந்தும் வழங்கப்படும்.

நிலச்சரிவில் கண்கள், கை, கால்களை இழந்தவா்கள் அல்லது 60 சதவீதம் வரை ஊனமுற்றவா்களுக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து ரூ.75,000 வழங்கப்படும். 40 முதல் 60 சதவீதம் வரை ஊனமுற்றோா் அல்லது மிகக் கடுமையான காயம் அடைந்தவா்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும்.

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டின் மேப்பாடி ஊராட்சி பகுதிகளை ஆய்வு செய்ய மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேசிய புவி அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜான் மத்தாய் தலைமையிலான 5 போ் கொண்ட நிபுணா் குழு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

பருவநிலை மாற்றம் காரணம்:இந்நிலையில், வயநாடு நிலச்சரிவுக்கு பருவநிலை மாற்றம் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என சா்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் குழு கூறுகையில், 2 மாத பருவமழையால் ஏற்கெனவே இலகுவான மண்ணைக் கொண்டிருந்த வயநாட்டில் ஒரே நாளில் பெய்த 14 செ.மீ. மழை நிலச்சரிவை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றம் காரணமாக மழையின் தீவிரம் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதும் 1850-1900 காலகட்ட சராசரியுடன் ஒப்பிடும்போது, சராசரி உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயா்ந்தால், மழையின் தீவிரம் மேலும் நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று வானிலை மாதிரிகளில் கணிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com