
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஆகஸ்ட் 8 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையை போராட்டக்காரா்கள் புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கினர்.
மேற்கு வங்க மாநிலம் உள்பட நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் மருத்துவா்களும், பயிற்சி மருத்துவா்களும் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோா் மருத்துவமனை முன்பு குவிந்து கோஷங்களை எழுப்பியபடி நள்ளிரவில் திடீரென மருத்துமனைக்குள் புகுந்து நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களும், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் அறை, மருந்துக் கடை மற்றும் புற நோயாளிகள் பிரிவும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த வன்முறையில் காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மேற்கு வங்கத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை மாலை கூறும்போது, “மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டு தளங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன. மருந்துப் பொருள்களும் சூறையாடப்பட்டுள்ளன. இதனால், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு, மருத்துவமனை உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன” என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.