பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த வீரரான அமன் ஷெராவத்துக்கு வடக்கு ரயில்வே வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) பதவி உயர்வு வழங்கி கௌரவித்து இருக்கிறது.
21 வயதான மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மிகக்குறைந்த வயதில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் அமன் ஷெராவத் பெற்றுள்ளார்.
நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக இந்தப் பதவி உயர்வு அமனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு எஸ். உபாத்யாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேலாளர் ஷோபன் சௌத்ரி அமனை பாராட்டி பரிசு வழங்கினார். அதே நேரத்தில் வடக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை அதிகாரியான சுஜித்குமார் மிஸ்ரா, அமன் ஷெராவத்தை பாராட்டி, அவர் பதக்கம் வென்றதற்காக பதவி உயர்வு அளித்து, கௌரவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து உபாத்யாய் கூறும்போது, “ இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது” என்றார்.
பாரீஸ் ஒலிம்பிக்கின் போது ஷெராவத் 13-5 என்ற புள்ளிக் கணக்கில் போர்ட்டோரிக்கா ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் டேரியன் டோய் குரூஸை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதேபோல, ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றொரு இந்திய வீரரான ஸ்வப்னில் குசேல், பயண டிக்கெட் பரிசோதகராக இருந்து இந்திய ரயில்வேயின் சிறப்பு அதிகாரியாக இரட்டை பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.