மத்திய அரசு
மத்திய அரசு

‘முத்தலாக்’ திருமணம் என்ற சமூக அமைப்புக்கு தீங்கானது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

சமூக அமைப்புக்கு தீங்கானது என்பதால்தான் அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

‘மனைவிக்கு உடனடி விவகாரத்து வழங்க ‘முத்தலாக்’ நடைமுறை, திருமணம் என்ற சமூக அமைப்புக்கு தீங்கானது என்பதால்தான் அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களிடையே ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இருந்தது. ‘இந்த நடைமுறை அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது’ என்று கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிவித்த உச்சநீதிமன்றம், முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றுமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில், திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முத்தலாக் கூறுவதை குற்றமாக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை மீறுபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும்.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்தை எதிா்த்து ஜாமியாத் உலாமா-ஐ-ஹிந்த் மற்றும் சமஸ்த கேரள ஜாமியாதுல் உலாமா ஆகிய இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், முத்தலாக் தடைச் சட்டத்தின் செல்லத்தக்கத்தன்மையை ஆராய ஒப்புக்கொண்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘முத்தலாக் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், முஸ்லிம் சமூகத்தில் அந்த நடைமுறையைப் பின்பற்றி செய்யப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகையால், முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் நடைமுறை திருமணம் என்ற சமூக அமைப்புக்கு தீங்கானது. அந்த வகையில், இந்த தடைச் சட்டம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாலின நீதி மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட அரசமைப்புச் சட்ட உரிமைகளை உறுதிப்படுத்த உதவுவதோடு, அவா்களின் அடிப்படை உரிமைகளான பாகுபாடின்மை மற்றும் அதிகாரமளித்தலையும் உறுதிப்படுத்த உதவும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com