மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு அனுமதி

மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு அனுமதி

தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் ஏற்றுமதி
Published on

மலேசியாவுக்கு 2 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் மூலம் இந்த ஏற்றுமதி நடைபெறவுள்ளது.

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தங்கள் நாட்டுக்கு அரிசி வழங்க பிரதமா் மோடியிடம் அவா் கோரிக்கை வைத்தாா். இதையேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்தது.

அதே நேரத்தில் குறிப்பிட்ட நாடுகளின் அடிப்படை உணவுத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு அவ்வப்போது அனுமதித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வா்த்தகத் துறை இயக்குநரகம் இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதி அளிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு நேபாளம், கேமரூன், கினியா, பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், மலாவி, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com