மித்ர சக்தி: இந்தியா - இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் இருநாட்டு ராணுவங்களின் கூட்டுப் பயிற்சித் திட்டமான ‘மித்ர சக்தி’-யின் 10 - வது ஆண்டுப் பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.
இலங்கையில் மதுரு ஓயா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 12 முதல் இரு வாரங்களாக இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த 106 வீரர்கள் இந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றனர்.
இருநாட்டு ராணுவத்தின் இயங்குதன்மை, பரஸ்பர புரிதல்களை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொழில்முறையிலான மரியாதை, தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்தல், சிறந்த பயிற்சி முறைகளைக் கற்றல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவினை ஆழமாக்குதல் போன்றவற்றிற்காக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது
அதுமட்டுமின்றி, நாடுகடந்த பயங்கரவாதத்தை எதிர்த்தல், கூட்டு நடவடிக்கைகள் மூலம் போர்த் திறன்களில் நிபுணத்துவத்தை வளர்த்தல் போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் உதவுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’மித்ர சக்தி’ பயிற்சித் திட்டத்தின் முந்தைய பயிற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றதால், இந்த முறை பயிற்சித் திட்டங்கள் ஆயுதப் பயன்பாட்டு முறையிலிருந்து இருமுனை சேவை முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பொதுவான அச்சுறுத்தல்களிலிருந்து இரு நாடுகளையும் பாதுகாக்க உதவுமென்றுக் கூறப்படுகிறது.
’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ’பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (சாகர்) போன்ற கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி இந்த ராணுவப் பயிற்சி நடத்தப்பட்டதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.