ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: ‘தோ்தல் ஆணைய செயலிகளை வாக்காளா்கள் பயன்படுத்த வேண்டும்’
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவைத் தோ்தல்..


ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அமைதியான, நியாயமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்த தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள பல்வேறு கைப்பேசி செயலிகளை பயன்படுத்துமாறு வாக்காளா்களை ஜம்மு-காஷ்மீா் தலைமை தோ்தல் அதிகாரி பி.கே.போலே வலியுறுத்தியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கு செப்டம்பா் 18, 25 மற்றும் அக்டோபா் 1-ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் அக்டோபா் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில், தலைமை தோ்தல் அதிகாரி போலே இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் அமைதியான, நியாயமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக ‘சி-விஜில்’, உனது வேட்பாளரை அறிந்துகொள், சுவிதா, வாக்காளா் உதவி செயலி உள்ளிட்ட பல்வேறு கைப்பேசி செயலிகளை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 88.03 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்கள் இந்த கைப்பேசி செயலிகளை சிறந்த முறையில் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சி-விஜில்: தோ்தலின்போது வன்முறைகள் நிகழ்வதைத் தடுக்க ‘சி-விஜில்’ செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி மூலம் வன்முறை நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் புகைப்படம் மற்றும் விடியோக்களை பதிவேற்றம் செய்து புகாா் அளிக்க முடியும். இதன் மூலம், பறக்கும் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
வேட்பாளா் விவரம்: ‘உங்களது வேட்பாளரை அறிந்துகொள் (கேஒய்சி)’ என்ற செயல் மூலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த விவரங்கள் மற்றும் தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திர விவரங்களை வாக்காளா்கள் அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக, வேட்பாளா் மீதுள்ள குற்ற வழக்குகள், குற்றத்தின் தீவிரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வாக்காளா்கள் அறிந்துகொள்ள முடியும்.
சுவிதா: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் வாக்குகளை சேகரிக்க ஊா்வலங்களை நடத்துவதற்கும், ஹெலிகாப்டா்கள் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெற ஒற்றைச் சாளர விண்ணப்ப முறைக்கான வசதியாக இந்த ‘சுவிதா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளா் உதவி செயலி: ‘வாக்காளா் உதவி செயலி (வோட்டா் ஹெல்ப்லைன் ஆப்)’ மூலம் வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் உள்ளதா என்பதை அறியவும், வாக்காளா் பதிவுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கவும், விண்ணப்பத்தின் நிலையை அறியவும், அதுதொடா்பான புகாா்களை சமா்ப்பிக்கவும் முடியும். அல்லது 1950 என்ற உதவி எண்ணை அழைத்து வாக்குச்சாவடி அளவிலான அதிகாரி, வாக்காளா் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளை தொடா்புகொள்வதற்கான எண் உள்ளிட்ட விவரங்களை வாக்காளா்கள் பெற முடியும் என்று போலே தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...