கோப்புப் படம்
கோப்புப் படம்

போலி வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.175 கோடி மோசடி: இருவர் கைது!

தெலங்கானாவில் போலி வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 175 கோடி வரை மோசடி செய்த இரு நபர்கள் சைபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

தெலங்கானாவில் போலி வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 175 கோடி வரை மோசடி செய்த இரு நபர்கள் சைபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் சம்சீர்கன்ஜ் பகுதியில் இருக்கும் வங்கியில் 6 கணக்குகளில் இருந்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த வங்கிக் கணக்குகள் முறையற்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக 600-க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய சைபர் குற்றங்கள் பதிவு செய்யும் தளமான என்சிஆர்பி தளத்தில் பதிவாகியுள்ளது.

இதனை சைபர் பாதுகாப்புத் துறையின் தரவுப் பரிசோதனைக் குழு கண்காணித்து வந்துள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி துபையிலிருந்து இங்குள்ள கூட்டாளிகளுக்கு வழிகாட்டி வந்துள்ளான். அவனுடைய வழிகாட்டுதலின்படி கூட்டாளிகள் 5 பேர் இங்குள்ள ஏழை மக்களைக் கவர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 6 புதிய வங்கிக் கணக்குகள் தொடங்க வைத்துள்ளனர்.

சைபர் குற்றங்கள் மற்றும் ஹவாலா மோசடிகள் மூலம் வரும் பணத்தை அந்தக் கணக்குகளில் பெற்று, வங்கிக் கணக்கின் உரிமையாளர்களுக்கு கமிஷன் கொடுத்து வந்துள்ளனர்.

கோப்புப் படம்
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

இதில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் அந்த 6 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.175 கோடி வரை பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

வங்கிக் கணக்குத் தொடங்கிய பின்னர் அதன் உரிமையாளார்களிடம் இருந்து அனைத்துக் காசோலைகளிலும் கையெழுத்து பெற்று அதனைக் குழுவில் உள்ள ஒரு நபரின் வசம் வைத்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதில், குறிப்பிட்ட அளவு பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி துபைக்கு அனுப்பியுள்ளனர். முக்கியக் குற்றவாளி வழிகாட்டுதலின்படி கூட்டாளிகள் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து பல்வேறு ஏஜெண்டுகள் மூலம் பிரித்து அவருக்கு வழங்கியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்புப் படம்
கிருஷ்ணர் வாழ்க்கை குறித்து விவாதிக்க மையங்கள் திறக்கப்படும்: ம.பி. முதல்வர் அறிவிப்பு!

பொதுமக்கள் வேறு நபர்களுக்காக வங்கிக் கணக்குத் தொடங்கி இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றும், இதற்கு முன்னர் அவ்வாறு யாரேனும் வங்கிக் கணக்கு தொடங்கியிருந்தால் https://cybercrime.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com