ஜம்மு -காஷ்மீர் தேர்தலுக்கு பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதையடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .
ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில் முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(ஆக. 28) கடைசி நாள்.
தேர்தலையொட்டி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் பாஜக இன்று(திங்கள்கிழமை) காலை 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மூன்று கட்டங்களிலும் முறையே 15, 10, 19 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இந்த பட்டியல் வாபஸ் பெறப்பட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து திருத்தப்பட்ட பட்டியல் என்று முதற்கட்டத் தேர்தலுக்கான 15 வேட்பாளர்களை மட்டும் அறிவித்தது.
அடுத்து வெளியான இரண்டாம் கட்ட பட்டியலில் கோகர்நாக் தொகுதிக்கு மட்டும் ஒரு வேட்பாளரின் பெயரை வெளியிட்டது.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாஜக அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் தேர்வில் திருப்தி இல்லை என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
'ஜம்மு- வடக்கு தொகுதியில் ஓமி கஜூரியா பிரபலமானவர். ஆனால், அங்கு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த ஷ்யாம் லால் சர்மாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓமி கஜூரியாவை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் நாங்கள் பாஜக பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்வோம்' என்று நிர்வாகிகள் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.