குஜராத்தில் திங்கள்கிழமை(ஆக. 26) கனமழை கொட்டித் தீர்த்தது. வதோதரா, ஆனந்த், கேடா, நவ்சாரி, பஞ்ச்மஹால் ஆகிய மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வதோதரா, நவ்சாரி, வல்சாட், சூரத் ஆகிய பகுதிகளிலும் சுற்றுவட்டாரங்களிலும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதிகளில் இருந்து 4,300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(ஆக. 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை(ஆக. 26) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரத்தில், அதிகபட்சமாக வதோதராவில் 270 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஆனந்த் மாவட்டத்தின் போர்சாட்டில் 268 மி.மீ., வதோதராவில் 262 மி.மீ., கேடா, மொரியா, ஆனந்த், காம்பாட் ஆகிய பகுதிகளில் 200 மில்லிமீட்டருக்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மழை விடாது பெய்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் சூழந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிகப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கட்ச், கேடா, ஆனந்த், பஞ்ச்மஹால், டாஹோட், தபி, நவ்சாரி, வல்சாட் உள்ளிட்ட சௌராஷ்ட்டிரா பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை(ஆக. 27) மிக கனமழை பெய்யும் என்பதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.