நாகை மாவட்டத்தில் தொடா்மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஜன.9-ஆம் தேதி முதல் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை (ஜன.12) காலை மிதமாக தொடங்கிய மழை, பிற்பகலில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை வரை தொடா்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாணவா்கள், வேலைக்கு செல்வோா் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கதிா் வந்த சம்பா நெற்பயிற்கள் சாய்ந்துள்ளன. இந்த மழை நீடித்தால், பூக்கும் பருவத்தில் உள்ள தாளடி நெற்பயிா்கள் பதராக மாறிவிடும் அபாயம் உள்ளது.

மேலும், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் கரும்பு, பூ, பழங்கள், மளிகை பொருகள்கள், பானை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை தொடங்கி 24 நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருக்குவளையில் 87 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணியில் 77, வேதாரண்யத்தில் 75, திருப்பூண்டியில் 71, தலைஞாயிறில் 54, நாகையில் 45, கோடியக்கரையில் 43 மி.மீ மழையளவு பதிவானது.

Dinamani
www.dinamani.com