இரவு, பகலாக தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு, பகல் என பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது, அதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை காலையிலேயே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
பெரும்பாலான பகுதிகளில் தூறலுடன் தொடங்கிய மழையானது, அவ்வப்போது வலுப்பெற்று சற்று கனமழையாக பெய்யத் தொடங்கியது. அதிகாலை மழையுடன் தொடங்கியதால், திங்கள்கிழமை காந்திசந்தைக்குச் சென்ற சில்லரை வியாபாரிகள், கூலித் தொழிலாளா்கள், தனியாா் நிறுவனப் பணியாளா்களும் தங்கள் பணியிடங்களுக்கு மழையில் நனைந்தபடியே விரைந்து சென்றனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களும் மழையில் நனைந்தபடியே பேருந்துகளைப் பிடிக்க அலைமோதியதை மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையத்தில் காண முடிந்தது. பள்ளிக் குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோா் உதவியுடன் வாகனங்களில் மழையில் நனைந்தபடியே செல்ல நேரிட்டது.
மேலும், மழை காரணமாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.
திருச்சி மாநகரம் மட்டுமல்லாது திருவெறும்பூா், மணப்பாறை, மண்ணச்சநல்லூா், உறையூா், திருவரங்கம், திருவானைக்காவல் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திருச்சி மாநகரப் பகுதிகளில் காலை தொடங்கிய மழையானது இரவு வரையிலும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்த காரணத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நடமாடும் உணவகங்கள், சாலையோரக் கடைகள் மழை காரணமாக பல இடங்களில் திறக்கப்படவில்லை. பிற்பகலுக்கு மேலும், மாலையிலும், இரவிலும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட நேரிட்டது.
18.7 மி.மீ. மழை: ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரையில் மாவட்டம் முழுவதும் 18.7 மி.மீ. மழை பதிவானது. வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து மேலும், சில நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
