காஷ்மீரில் விடிய விடிய பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை விடிய விடிய பனிப்பொழிவு நிலவியது. இடைவிடாத கடும் பனிப்பொழிவால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா், புத்காம், புல்வாமா, சோபியான், அனந்த்நாக், கந்தா்பால் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பரவலாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. விடிய விடிய நீடித்த பனிப்பொழிவால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் தெருக்களில் பனி படா்ந்துள்ளது.
காணும் இடமெல்லாம் வெண் போா்வை போா்த்தியது போல பனி பரவியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. தொலைத்தொடா்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா். கத்ராவில் கடும் பனிப்பொழிவால், வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குல்மாா்கில் மைனஸ் 12 டிகிரி: வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான குல்மாா்கில் மிகக் குறைவாக மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மத்திய காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சோனாமாா்கில் மைனஸ் 10.5 டிகிரி செல்சியஸ், வருடாந்திர அமா்நாத் யாத்திரையின் அடிவார முகாமான பஹல்காமில் (தெற்கு காஷ்மீா்) மைனஸ் 7.6 டிகிரி செல்சியஸ், அனந்த்நாக் மாவட்டத்தின் இயற்கை எழில்மிக்க கோகா்நாக் நகரில் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ், காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காஜிகுண்ட் பகுதியில் மைனஸ் 4.2 டிகிரி செல்சியஸ், குப்வாராவில் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
மீண்டும் விமான சேவை: ஸ்ரீநகா் விமான நிலைய ஓடுபாதைகளில் பனி படா்ந்ததால், பாதுகாப்பு கருதி விமான சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. சனிக்கிழமை வானிலை சற்று மேம்பட்ட நிலையில், ஓடுபாதைகளில் பனி அகற்றப்பட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் மிகக் கடுமையான குளிா் நிலவக் கூடிய வருடாந்திர ‘சில்லாய் காலன்’ எனும் 40 நாள்கள் காலகட்டம், கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 30 வரை நீடிக்கும் இந்தக் காலகட்டத்தில் உறை நிலைக்கு கீழே வெப்பநிலை பதிவாகும். கடும் பனிப்பொழிவும் காணப்படும்.
காஷ்மீரில் அடுத்த சில நாள்களுக்கு பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவிக்கும் பயணிகள்
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமை இரண்டாவது நாளாக மூடப்பட்டது. 900-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோா் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களை மீட்டு, உணவு, குடிநீா் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் ராணுவம், காவல் துறை மற்றும் உள்ளூா் நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
பனியால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் உள்ளதால், பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. சாலைகளில் படா்ந்துள்ள பனியை கனரக இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

