
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. ஆனால் மாநிலம் முழுக்க வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், அதே துரிதவேகத்தில் நடவடிக்கை எடுக்க யாருமே வரவில்லை என்று மாநில மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாம்நகர் விமான தளம், தொழிலதிபர் முகேஷ் அம்பானியில் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளுக்காக சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டது.
ஜாம்நகர் விமான நிலையத்தில், ராணுவ விமான தளத்துடன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு, சராசரியாக 5 முதல் அதற்கும் குறைவான முன்பே திட்டமிடப்பட்ட விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். அதில், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து வரும் விமானங்களும் உள்ளடக்கம்.
ஆனால், மார்ச் மாதம் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் நிச்சயதார்த்த விழாவுக்காக, அந்த விமான தளம், சர்வதேச விமான நிலையம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டது. அங்கு மார்ச் 1ஆம் தேதி தரையிறங்கிய விமானங்களின் எண்ணிக்கை மட்டும் 70. இதில், தனியார் ஜெட்கள், சார்ட்டட் விமானங்கள் என பல வகையான விமானங்களும் அடக்கம்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், முக்கிய விருந்தினர்களை அழைத்துக் கொண்டு வந்த விமானங்களும் இங்குதான் தரையிறக்கப்பட்டன. அந்த அளவுக்கு, தொழிலதிபரின் மகன் திருமணத்துக்காக, மிகத் துரித கதியில், ஒரு சாதாரண விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.
இங்கு வந்திறங்கிய விருந்தினர்கள் குஜராத் காலசார இசையுடன் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். ஆனால், இன்று குஜராத்தில் கடந்த மூன்று நாள்கள் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் ஐந்து நாள்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்திருக்கும் ஜாம்நகரில் மீட்புப் பணிக்காக ஏன் துரிதகதியில் யாருமே வரவில்லை என்பதே அந்த மாநில மக்களின் கேள்வி.
இந்த ஜாம்நகர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கடுமையான பாதிப்பை குஜராத் சந்தித்திருக்கும் நிலையில், அங்கு அதே துரிதகதியில் மக்களை மீட்கவோ, வெள்ளத்தை வெளியேற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லையே என்று மாநில மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடா் மழையால் நீா்நிலைகளில் நீா்மட்டம் அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சமஹால், நவ்சாரி, வல்சாத், வதோதரா, பரூச், கெடா, காந்திநகா், பொடாட், ஆரவல்லி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் பகிா்ந்த தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தின் ஆண்டு சராசரியில் கிட்டத்தட்ட 100 சதவீதம் மழை ஏற்கெனவே பெய்துள்ளது. சௌராஷ்டிரம், கட்ச் மற்றும் தெற்கு குஜராத்தில் ஆண்டு சராசரிக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது.
சௌராஷ்டிரம்-கட்ச் பகுதியில் புதன்கிழமை, வியாழக்கிழமை அதீத கனமழை பெய்யும் என்றும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை வரை கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.