போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நீதி பெற்றுத்தர வலியுறுத்தி, மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்து தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என மமதா பானர்ஜி இன்று கோரிக்கை வைத்திருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சத்ர பரிஷத் நிறுவன நாளையொட்டி அக்கட்சி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முதுநிலை பெண் மருத்துவ மாணவியை நினைவுகூரும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதில் முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் இடையே பேசினார்.
அப்போது, ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல் துறையிடமிருந்து சிபிஐ வழக்கைப் பெற்று 16 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்து நாள்கள் பல கடந்தும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். எனினும், தயைகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், போராட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என மேற்கு வங்க இளநிலை மருத்துவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது. முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி பெற்றுத்தர வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது.
ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷை இடைநீக்கம் செய்ததைப் போன்று, வழக்கை ஆரம்பக்கட்டத்தில் விசாரித்த ஆணையரையும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என இளநிலை மருத்துவ மாணவர்கள் கோரியுள்ளனர்.