ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேவுள்ள ஷம்ஷு, மச்சில் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்ததாக உளவுத்துறை தகவல் அளித்ததை தொடர்ந்து, புதன்கிழமை இரவு ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது, மோசமான வானிலைக்கு மத்தியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை கண்ட பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், இருவர் பலியாகியிருக்கக்கூடும் என்றும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்தார் பகுதியில் நடைபெற்ற மற்றொரு தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
இந்த சம்பத்தை தொடர்ந்து, தேடுதல் பணி நடைபெறும் இடங்களுக்கு மேலும் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ராஜெளரி மாவட்டத்தில் நேற்றிரவு 11.45 மணியளவில் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து, அந்த பகுதியிலும் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.