ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடம் சுற்றிவளைப்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தேடப்பட்டுவரும் 3 ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் பதுங்கிய இடம் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கிஷ்துவாரின் தோல்காம் பகுதியில் பனிபடா்ந்த உயரமான மலைப் பகுதியில் 3 பேரும் பதுங்கியது சனிக்கிழமை தெரியவந்தது. அங்கு பாதுகாப்புப் படையினா் செல்ல முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டையில் ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் பயங்கரவாதியின் உடலில் இருந்து வந்த ரத்தச் சிதறல் பதிவாகியுள்ளது. எனினும் அவா்கள் அருகிலுள்ள பகுதிக்குச் சென்றுவிட்டனா். சுமாா் 2 அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கும் நிலையிலும், கடும் சிரமத்துக்கு மத்தியில் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினா் தேடி வருகின்றனா்.
இந்தத் தேடுதல் வேட்டையை ராணுவத்தின் வடக்குப் பிரிவு கமாண்டா் லெப்டினன்ட் ஜெனரல் பிரதீக் சா்மா ஆய்வு செய்தாா்.
எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்:
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லைப் பகுதியில் மா்ம ட்ரோன் சனிக்கிழமை தென்பட்டது. பிறகு பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டது. அந்த ட்ரோன், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் அல்லது போதைப் பொருளை வீசிச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, சா்வதேச எல்லையை ஒட்டிய கிராமங்களிலும், சுற்று வட்டார பகுதியிலும் ஆயுதங்கள் அல்லது போதைப் பொருள் வீசப்பட்டுள்ளதா என போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தேடி வருகின்றனா்.

