
மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோரியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய சாம்ராஜ்யத்தின் மகாராஜா சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திங்கள்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் பால்கரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, ``2013 ஆம் ஆண்டில், பிரதமர் வேட்பாளராக பாஜக என்னை நியமித்தபோது, ராய்காட்டில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சமாதி முன் உட்கார்ந்து எனது பயணத்தைத் தொடங்கினேன். எங்களுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; தெய்வம்.
சிலை இடிந்து விழுந்ததற்கு எனது கடவுளான சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் மன்னிப்பு கேட்கிறேன். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிலை இடிந்ததால் வேதனை அடைந்தவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை” என்று கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை, பிரதமர் நரேந்திர மோடியால் கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதியில்தான் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலை மராட்டிய கடற்படை மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோரின் பாரம்பரியத்தை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நவீன இந்திய கடற்படையுடன் அதன் வரலாற்று தொடர்பை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.